தமிழக மக்கள்தொகை 7.21 கோடி!

Wednesday, July 20, 2011

தமிழகத்தில் நகர்ப்புறங்களின் மக்கள்தொகை வளர்ச்சி 27.16 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று தமிழக மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் எஸ்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழகத்தில் கிராமங்கள் மற்றும் நகரங்களின் மக்கள்தொகை கணக்கெடுப்பு பட்டியலை (மக்கள் தொகை கணக்கெடுப்பு&2011), மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குனர் எஸ்.கோபாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டார். மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் பெற்றுக் கொண்டார்.
பின்னர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:


கடந்த ஆண்டு ஜூன் & ஜூலை மாதத்தில் வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பு நடந்தது. இந்த ஆண்டு பிப்ரவரி 9 முதல் 29 வரை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து, இந்திய மக்கள் தொகையின் உத்தேச கணக்கெடுப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களின் மக்கள்தொகை குறித்த விவரம் டெல்லியில் வெளியிடப்பட்டது. இன்று மாநிலங்களுக்கான கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களின் உத்தேச மக்கள் தொகை விவரம் வெளியிடப்படுகிறது.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை நகர்ப்புறங்களாக கணக்கெடுக்கப்படுகிறது. இது தவிர 5 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட பகுதி, சில இடங்களில் ஊராட்சிகளாக இருந்தும் 75 சதவீத விவசாயம் இருக்காது. இவற்றையும் நகர்ப்புறங்களாக கணக்கெடுக்கப்படுகிறது. இந்த அடிப்படையில் கிராமங்களின் எண்ணிக்கை 16,317லிருந்து 15,979 ஆக குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள், 215 தாலுக்காக்கள், 1097 நகர்ப்புற அமைப்புகள் மற்றும் 15,979 கிராமங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2011ம் ஆண்டை 2001ம் ஆண்டோடு ஒப்பிடும்போது, மாவட்டங்களில் 2ம், தாலுக்காக்களில் 14ம், நகர்ப்புறங்களில் 265ம் அதிகரித்துள்ளன.

தமிழகத்தில் 7 கோடியே 21 லட்சத்து, 38,958 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 3 கோடியே 61 லட்சத்து 58,871. பெண்கள் 3 கோடியே 59 லட்சத்து 80,087 பேர். கிராமப்புறங்களில் 3 கோடியே 71 லட்சத்து 89,229 பேரும், நகர்ப்புறங்களில் 3 கோடியே 49 லட்சத்து 49,729 பேரும் வசிக்கின்றனர். கிராமப்புறங்களில் 1 கோடியே 86 லட்சத்து 63,701 ஆண்கள் உள்ளனர். பெண்கள் 1 கோடியே 85 லட்சத்து 25,528 பேர் உள்ளனர். நகர்ப்புறங்களில் ஆண்கள் ஒரு கோடியே 74 லட்சத்து 95,170 பேரும், பெண்கள் ஒரு கோடியே 74 லட்சத்து 54,559 பேரும் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மக்கள்தொகை வளர்ச்சி 15.60 சதவீதமாக உள்ளது. கிராமப்புறங்களில் 6.49 சதவீதமாக உள்ளது. நகர்ப்புறங்களில் 27.16 சதவீதமாக உள்ளது.

தற்போது 2வது கட்டமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் உத்தேச கணக்கெடுப்புதான். கணக்கெடுப்பின்போது பெறப்பட்ட அனைத்து புள்ளிவிவரங்களும் ஆய்வு செய்த பிறகு அடுத்த ஆண்டு இறுதி விவரங்கள் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள்தொகை பற்றி விரிவான புள்ளிவிவரங்களை ஷ்ஷ்ஷ்.நீமீஸீsusவீஸீபீவீணீ.ரீஷீஸ்.வீஸீ, ஷ்ஷ்ஷ்.நீமீஸீsus.tஸீ.ஸீவீநீ.வீஸீ ஆகிய இணைய தளங்களிலும் பார்க்கலாம்.

தமிழகத்தில் 69 லட்சம் குழந்தைகள்

2011ன் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 68லட்சத்து 94,821 பேர். இவர்களில் ஆண்கள் 35லட்சத்து 42,351ம் பெண்கள் 33லட்சத்து 52,470 பேரும் உள்ளனர். 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கிராமப்புறங்களில் மட்டும் 36லட்சத்து 51,552 பேர் உள்ளனர். நகர்ப்புறங்களில் 32லட்சத்து 43,269 பேர் உள்ளனர். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைகளின் மொத்த மக்கள் தொகையில் 0.034 கோடி எண்ணிக்கையில் குறைந்துள்ளது. குழந்தைகளின் ஆண்&பெண் விகிதம் 2001ம் ஆண்டு கணக்கின்படி 942 (ஆயிரம் ஆண்களுக்கு) ஆக இருந்து 2011ல் 946 ஆக உயர்ந்துள்ளது.

கிராமப்புறங்களில் குழந்தைகளின் ஆண்&பெண் விகிதமானது, நீலகிரி மாவட்டம் (979) முதல் இடத்திலும், கடலூர் மாவட்டம் (878) கடைசி இடத்திலும் உள்ளது. நகர்ப்புறங்களில் நீலகிரி மாவட்டம் (984) முதல் இடத்திலும், அரியலூர் மாவட்டம் (908) கடைசி இடத்திலும் உள்ளது.

முதலில் குமரி; கடைசியில் தருமபுரி

தர்மபுரி மாவட்டம் எழுத்தறிவில் கடைசி மாவட்டமாகவே இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் எழுத்தறிவில் முதல் இடத்தில் உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு &2011ன்படி, தமிழ்நாட்டில் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களின் மக்கள் தொகை எவ்வளவு என்ற விவரம் அடங்கிய பட்டியலை தமிழ்நாடு மக்கள் தொகை இயக்குனர் எஸ்.கோபாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:

தமிழகத்தில் 5 கோடியே 24 லட்சத்து 13,116 பேர் எழுத்தறிவுடையவர்களாக (எழுத, பேச மற்றும் புரிந்து கொள்ளுதல் என்ற அடிப்படையில் எழுத்தறிவு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது) உள்ளனர். இவர்களில் 2 கோடியே 47லட்சத்து 52,447 பேர் கிராமப்புறங்களில் உள்ளனர். 2 கோடியே 76 லட்சத்து 60,669 பேர் நகர்ப்புறங்களில் இருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் 1.189 கோடி பேர் எழுத்தறிவுள்ளவர்களாக அதிகரித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் எழுத்தறிவுள்ளவர்களின் எண்ணிக்கை 0.183 கோடியாக கொண்டு முதல் இடத்தில் உள்ளது.
நகர்ப்புறங்களில் எழுத்தறிவுள்ளவர்களின் எண்ணிக்கை 0.385 கோடியாக கொண்டு சென்னை முதல் இடத்திலும், கோவை 0.212 கோடியாக கொண்டு 2வது இடத்திலும் உள்ளன.

ஒரு சதுர கி.மீட்டருக்கு 555 பேர்

தமிழகத்தில் ஒரு சதுர கி.மீட்டர் பரப்பளவில் 555 பேர் வசிக்கின்றனர். சென்னைநகரில் ஒரு சதுர கி.மீ.பரப்பளவில் 27ஆயிரம் வசிக்கின்றனர். இது இந்தியாவில் டெல்லிக்கு அடுத்து 2வது இடத்தில் உள்ளது. ஆயிரம் ஆண்களுக்கு 995 பெண்கள் உள்ளனர். கிராமப்புறங்களில் ஆயிரம் ஆண்களுக்கு 993 பெண்களும், நகர்ப்புறங்களில் ஆயிரம் ஆண்களுக்கு 998 பெண்களும் உள்ளனர்.

80 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றவர்கள்

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் எழுத்தறிவு 80.33 சதவீதமாகும். கிராமப்புறங்களில் 73.80 சதவீதமும், நகர்ப்புறங்களில் 87.24 சதவீதமும் எழுத்தறிவு பெற்றுள்ளனர். எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 6.88 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதில் கிராமப்புறங்களில் 7.59 சதவீதம், நகர்ப்புறங்களில் 4.71 சதவீதமாகும். 2001&2011ல் மொத்த மக்கள் தொகையில் பெண்களின் எழுத்தறிவு கிராமப்புறங்களில் 10.24 சதவீதமும், நகர்ப்புறங்களில் 6.68 சதவீதமும் அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டம் கிராமப்புறங்களில் பெண்களின் எழுத்தறிவு விகிதம் 56.17 புள்ளிகளைக் கொண்டு கடைசி இடத்தில் உள்ளது. நகர்ப்புறங்களில் பெண்களின் எழுத்தறிவு 70.25 புள்ளிகளைக் கொண்டு தர்மபுரி மாவட்டம் கடைசி இடத்திலும் உள்ளது.

0 comments:

IP
Blogger Widgets