விண்வெளி நிலையத்தை தாக்க வந்த விண் கல்: வீரர்கள் அவசரமாக வெளியேற்றம்

Monday, July 18, 2011

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 6 உறுப்பினர் கொண்ட குழு உள்ளது. இந்த வீரர்கள் இருந்த விண்வெளி நிலையத்தை பயங்கர கல் ஒன்று தாக்க வந்ததால் அவர்கள் அவசரமாக வெளியேறினர்.

அந்த வீரர்கள் ரஷ்யா சோயுஸ் சிறிய கலத்திற்குள் அவசர நடவடிக்கையாக புகுந்தனர். 820 அடி இடைவெளியில் அந்த விண் கல் விண்வெளி நிலையத்தை தாக்காமல் சென்றது.
அபாயகரமான வேகத்தில் கல் வருவதை தொடர்ந்து வீரர்கள் சோயுஸ் சிறிய கலத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர் என ரஷ்யா விண்வெளித் துறை தெரிவித்தது. கடந்த காலத்திலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து உள்ளன.
அவை அவசர நிலையை ஏற்படுத்தியது இல்லை என மாஸ்கோவிற்கு வெளியே உள்ள ரஷ்ய விண்வெளி கட்டுப்பாட்டு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற்போது வீரர்கள் சோயுஸ் சிறிய கலத்திற்கு வந்தது அவசர நிலை நடவடிக்கை அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
2009ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த நிகழ்வின் போது விண்வெளி வீரர்கள் இது போன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு சிறிது நேரம் வெளியேற வேண்டி இருந்தது.
விண் கல் எந்த நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை வந்தடையும் என தெரியாததால் ஒருவித பதட்டம் ஏற்பட்டது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் தற்போது 3 ரஷ்யர், 2 அமெரிக்கர் மற்றும் ஒரு ஜப்பான் விண்வெளி வீரர் என 6 பேர் உள்ளனர்.
ரஷ்ய சோயுஸ் கலம் மூன்று உறுப்பினர்களை பாதுகாக்கும் திறன் படைத்தது. கடந்த 2000ம் ஆண்டு முதல் சர்வதேச விண்வெளி நிலையம் அருகே இரண்டு சோயுஸ் சிறிய கேப்சூல்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.

0 comments:

IP
Blogger Widgets