இந்திய ஹொக்கி அணி வெற்றிகளை குவித்து முன்னணி அணியாக வலம் வருவதற்கு சில காலம் காத்திருக்க வேண்டும் என்று அணியின் பயிற்சியாளர் மைக்கல் நாப்ஸ் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நாப்ஸ் சமீபத்தில் இந்திய ஹொக்கி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் மேலும் கூறியது, இந்திய ஹொக்கி அணி நிர்வாகிகளுக்கு இடையில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. ஆனால் அது எந்த வகையிலும் என்னை பாதிக்கவில்லை.
இந்திய வீரர்களை சிறப்பாக செயல்பட வைத்து முன்னணி அணியாகக் கொண்டு வருவதே என்னுடைய வேலை. இப்போது அதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். இந்திய வீரர்களின் உடல் தகுதி மிகப்பெரும் பிரச்சினையாக உள்ளது. அதற்காக இப்போது கடுமையாக உழைத்து வருகிறோம். உடலியக்கவியல் நிபுணர் டேவிட் ஜான், வீரர்களின் உடல்தகுதிக்காக பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறார். வீரர்களை நல்ல உடல்தகுதி கொண்டவர்களாக மாற்றுவார்.
இந்திய அணி வெற்றிகளை குவிக்க சில காலம் பொறுமையோடு காத்திருக்க வேண்டும். ஒரே நாளில் வீரர்களின் செயல்பாட்டில் மாற்றம் கொண்டு வரமுடியாது. அந்த அதிசயம் ஒருநாள் இரவில் நடந்துவிடாது. நான் 5 வருடங்கள் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளேன். நிச்சயம் இந்திய அணியை முன்ணனி அணியாக கொண்டு வருவேன். அதற்கு அனைவரும் பொறுமையோடு இருப்பதோடு, ஆதரவும் அளிக்க வேண்டும் என்றார்.
ஹொக்கி, இந்தியாவில் பிரபலமடைய வேண்டும் என்றால் இந்திய கிரிக்கட் அணியைப் போன்று தேசிய ஹொக்கி அணியும் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்திய கிரிக்கட் அணி சிறப்பாக செயல்படுவதாலேயே இந்தியர்கள் கிரிக்கட்டின் மீது தீராத பற்று கொண்டுள்ளனர். அதேபோன்று ஹொக்கி அணியும் சிறப்பாக விளையாடும்போது, மக்களின் ஆர்வம் ஹொக்கியின் மீது திரும்பும்.
அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய ஹொக்கி அணி தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் முன்னணி அணிகளில் ஒன்றாக இருக்கும் என்றார். உங்களுக்கு உதவியாக அவுஸ்திரேலியாவில் இருந்து யாரையாவது அழைத்து வரும் எண்ணம் உள்ளதா? என்று கேட்டபோது, இப்போது அதுபோன்ற எண்ணம் எதுவும் இல்லை. சில காலம் கழித்து பார்க்கலாம் என்றார்.
2012 ல் லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் விளையாட இந்திய ஹொக்கி அணி தகுதிபெறுமா என்பது குறித்துப் பேசிய அவர், குறுகிய கால பயிற்சியில் ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெறுவது கடினமானது. மற்ற அணிகள் 5 ஆண்டுகளுக்கு முன்பே பயிற்சியைத் தொடங்கிவிட்டன. ஆனாலும் நம்முடைய வீரர்கள் ஒலிம்பிக்கில் விளையாட தகுதியானவர்களே என்றார்.
ஒலிம்பிக் ஹொக்கி தகுதிச்சுற்று அடுத்த ஆண்டு பிப்ரவரி 16 முதல் 26 வரை டெல்லியில் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக செப்டம்பர் 3 முதல் 12 வரை சீனாவில் நடைபெறும் முதல் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது. அதுகுறித்துப் பேசிய நாப்ஸ், போட்டிக்கு முன்னதாக எதையும் கணிக்க முடியாது. அதனால் இப்போது எதையும் தெரிவிக்க முடியாது.
அது எனக்கு முதல் போட்டி. அதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அந்தப் போட்டிக்கு தயாராக போதிய கால அவகாசம் இல்லை. இருப்பினும் சிறப்பாக செயல்படுவோம். இந்தப் போட்டியில் பாகிஸ்தானும் விளையாடுவது மகிழ்ச்சிக்குரியது. எப்போதுமே இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை ரசிப்பது மகிழ்ச்சியாக இருக்கும் என்றார்.
இந்திய ஹொக்கி அணி முன்னணியில் வர சில காலம் காத்திருக்க வேண்டும்: பயிற்சியாளர் நாப்ஸ்
Wednesday, July 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment