அப்ரிடியிடம் இருந்து ரூ.45 லட்சம் அபராதம் வசூலித்தது பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம்

Thursday, July 21, 2011

பாகிஸ்தான் முன்னாள் கப்டன் அப்ரிடியிடம் இருந்து ரூ.45 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை மற்றும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் விளையாடியதற்காக அவருக்கு ரூ.55 லட்சம் பாகிஸ்தான் கிரிக்கட் வழங்க வேண்டியிருந்தது. அதில் இருந்து அபராதத் தொகையான ரூ.45 லட்சம் கழிக்கப்பட்டுள்ளது. இதை பாகிஸ்தான் கிரிக்கட் வாரிய அதிகாரிகளும் உறுதி செய்தனர்.
முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் கப்டனாக இருந்த ஷாகித் அப்ரிடியை அப்பதவியில் இருந்து நீக்கியது பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம். இதனால் ஆத்திரமடைந்த அப்ரிடி, மூத்த வீரர்களுக்கு கிரிக்கட் வாரிய நிர்வாகிகள் உரிய மரியாதை அளிப்பதில்லை என்று கூறி கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து கடும் கோபமடைந்த பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம், இங்கிலாந்தின் ஹாம்ப்ஸயர் அணியில் விளையாட அப்ரிடிக்கு அளித்திருந்த தடையில்லாச் சான்றிதழை (என்ஓசி) திரும்பப் பெற்றது.
மேலும் பாகிஸ்தான் கிரிக்கட் வாரியத்தின் விதிமுறைகளை மீறியதாகக் கூறி விசாரணைக் கமிட்டியையும் அமைத்தது. ஆனால் இதை எதிர்த்து அப்ரிடி சிந்து மாகாண உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதன்பிறகு வழக்கை திரும்ப பெற்ற அப்ரிடி, விசாரணைக் கமிட்டியின் முன்பு ஆஜரானார். அப்போது அவருக்கு ரூ.45 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஹாம்ப்ஸயர் அணியில் விளையாடவும் தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 comments:

IP
Blogger Widgets