பிரிட்டன் பிரதமர் கமரூனுக்கு புதிய நெருக்கடி

Sunday, July 24, 2011

பிரிட்டிஷ் ஸ்கை செய்தி நிறுவனத்தை வாங்குவதில் ரூபர்ட் முர்டோக்குக்கு தோல்வி ஏற்பட்டதால் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் புதிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்.

பிரிட்டனில் மூடப்பட்ட நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகையின் தொலைபேசி ஒட்டுக் கேட்பு தொடர்பாக நியூஸ் கார்ப்பரேஷன் தலைவர் ரூபர்ட் முர்டோக் பிரிட்டன் பாராளுமன்றத்தின் விசாரணைக்கு உள்ளானார்.
நியூஸ் ஆப் த வேர்ல்டு பத்திரிகையின் முன்னாள் எடிட்டரை தனது செய்தித் தொடர்பாளராக நியமித்துக் கொண்டதற்கு பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் பாராளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரியிருந்தார்.
இந்நிலையில் பிரிட்டிஷ் ஸ்கை செய்தி நிறுவனத்தை ரூபர்ட் முர்டோக் வாங்க பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பிரதமர் டேவிட் கமரூன் உதவி செய்தார். இந்த பேச்சுவார்த்தையில் முன்னாள் தகவல் தொடர்பு இயக்குனர் ஆன்டிகுல்சனும் ஈடுபட்டிருந்தார்.
ரூபர்ட் முர்டோக் தற்போது பிரிட்டிஷ் ஸ்கை நிறுவனத்தை வாங்கும் திட்டத்தை கைவிட்டுள்ளதால் அந்த நிறுவன பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்த விளக்கத்தை அளிக்கும்படி எதிர்க்கட்சிகள் வற்புறுத்துகின்றன.
ஸ்கை நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்விக்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பல்ல என கமரூன் தெரிவித்துள்ளார். இவருக்கு துணைப் பிரதமரும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
எனினும் ஸ்கை நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தைகளை ஒளிவு மறைவில்லாமல் வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வற்புறுத்துவதால் பிரதமருக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

0 comments:

IP
Blogger Widgets