இந்தியாவுக்கு எதிரான பயிற்சி தொடரை இங்கிலாந்து வெல்லும் என்று இங்கிலாந்தின் முன்னாள் கப்டன் இயான் போத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டெய்லி மிரருக்கு அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறியிருப்பது: இந்திய அணி உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தாலும் இப்போது நடைபெற்று வரும் பயிற்சி தொடரை இங்கிலாந்து தான் வெல்லும்.
இங்கிலாந்து தான் இப்போது உலகின் மிகச்சிறந்த அணி. இவ்விரு அணிகளையும் ஒப்பிடும் போது இந்திய வீரர்களில் பெரும்பாலானோர் ஓய்வு பெறும் வயதில் உள்ளனர். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் இளைஞர்களாகவும், துடிப்புமிக்கவர்களாகவும் காணப்படுகின்றனர்.
இங்கிலாந்து வெற்றி பெற வேண்டும் என்பதைவிட சச்சின் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் விளையாடுவதால் தரமான போட்டியைக் காண வேண்டும் என்றே விரும்புகிறேன். இந்தப் போட்டியில் சச்சின் சதமடித்தால் பாராட்டுவேன். அவர் மிகச்சிறந்த வீரர், மிகச்சிறந்த மனிதர், கிரிக்கட்டின் தூதர்.
இங்கிலாந்து வெற்றிபெறும் என்ற எண்ணத்தோடு தான் இங்கு வர்ணனை செய்ய வந்துள்ளேன். அதேசமயம் மிகச்சிறந்த வீரர்கள் அடங்கிய முன்னணி அணி விளையாட வந்துள்ளது. அந்த அணியில் சச்சினின் பெயரும் இடம்பெற்றுள்ளதால் நிச்சயம் ஏதாவது சாதனை நிகழ்த்தப்படும் என்பதை லார்ட்சுக்கு வரும் முன்னரே உறுதியாகத் தெரிந்து கொண்டேன்.
சச்சினுக்கு எதிராக விளையாடியதை நினைவுகூர்ந்த இயான் போத்தம் நான் கிரிக்கட்டில் இருந்து ஓய்வுபெற்று 18 வருடங்கள் ஆகிவிட்டன. என்னுடைய காலத்தில் விளையாடியவர்களில் சச்சினைத் தவிர அனைவரும் ஓய்வு பெற்று விட்டனர். இப்போதும் சிறப்பாக ஆடி வரும் அவருக்கு மதிப்பளிக்கிறேன்.
அவர் 2011லும் இளம் வீரரைப் போன்று ஆடி வருகிறார். உலகக் கோப்பையை வென்று விட்டதோடு இப்போது 100வது சதத்தை நோக்கி விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு கிரிக்கட் வெறியர். அவரை எப்போதுமே சாதாரணமாக நினைக்கக்கூடாது. அவர் தொடர்ந்து சிறப்பாக ஆடி சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறார்.
இக்கட்டான நேரங்களிலும் அவர் அருமையாக விளையாடுகிறார். அவருக்கு ஈடு இணையற்ற வீரர் வேறு யாரும் கிடையாது. வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு சச்சினை விட சிறந்த முன்மாதிரி வீரர் யாரும் இருக்க முடியாது. அவர் தான் எப்போதுமே நல்ல முன்மாதிரி என்றார்.
இந்தியாவுக்கு எதிரான பயிற்சி தொடரை இங்கிலாந்து வெல்லும்: இயான் போத்தம் நம்பிக்கை
Monday, July 25, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment