கடாபிக்கு எதிரான கைது வாரண்டை ஏற்க முடியாது: லிபியா

Monday, July 18, 2011

லிபியா தலைவர் கடாபிக்கு எதிரான சர்வதேச குற்றவியல் கோர்ட்டின் கைது வாரன்ட்டை ஏற்க மாட்டோம் என்று அந்நாட்டின் நீதித்துறை அமைச்சர் முகம்மெத் அல் குவாமுதி தெரிவித்துள்ளார்.

லிபியாவில் தனக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது அந்நாட்டுத் தலைவர் கடாபி மனித உரிமை மீறல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி சர்வதேச குற்றவியல் கோர்ட் நேற்று முன்தினம் கைது வாரன்ட் பிறப்பித்தது. கடாபியின் மகன் சயீப் அல் இஸ்லாம் மற்றும் அந்நாட்டு உளவுத்துறை தலைமை அதிகாரிக்கும் கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதுகுறித்து திரிபோலியில் அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் முகம்மெத் அல் குவாமுதி அளித்த பேட்டியில் கூறியதாவது: மூன்றாம் தர நாடுகளின் தலைவர்கள் மீது வழக்கு தொடர்வதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஆயுதமாக மேற்கத்திய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.
லிபியா அரசில் கடாபியோ, அவரது மகனோ எவ்வித பொறுப்பிலும் இல்லை. ஆதலால் அவர்கள் மீது சர்வதேச குற்றவியல் கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவுக்கும், அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
பெங்காசியில் கடாபிக்கு எதிரான கைது வாரன்ட்டை கிளர்ச்சியாளர்கள் வரவேற்று கொண்டாடினர். சர்வதேச குற்றவியல் கோர்ட்டின் ஒன்பது ஆண்டு கால வரலாற்றில் 2009ல் முதன் முதலாக சூடான் அதிபர் ஓமர் அல் பஷீருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. தற்போது இரண்டாவதாக கடாபிக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

0 comments:

IP
Blogger Widgets