இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி: இன்று லார்ட்சில் தொடக்கம்

Friday, July 22, 2011

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று லார்ட்சில் துவங்குகிறது.

இது ஐ.சி.சி. சார்பில் நடத்தப்படும் 2000 வது டெஸ்ட் போட்டி. இதில், இந்தியாவின் சச்சின், தனது 100 வது சதத்தை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட், லார்ட்ஸ் மைதானத்தில் இன்று துவங்குகிறது. இந்த போட்டி பல்வேறு சாதனைகளை எட்டவுள்ளது. ஐ.சி.சி. சார்பில் நடக்கும் 2000 வது டெஸ்ட், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 100 வது டெஸ்ட் என்ற பெருமையும் பெற்றுள்ளது.
இந்திய அணியில் காயம் காரணமாக, அதிரடி துவக்க வீரர் சேவாக் இன்று களமிறங்க மாட்டார். டெஸ்ட் போட்டியில், ”டுவென்டி 20” போல, விறு, விறுப்பை கொண்டு வந்தவர் சேவாக். இவர் இல்லாதது அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. மற்றொரு துவக்க வீரர் காம்பீர் காயத்தில் இருந்து மீண்டுள்ளார். இவருடன் தமிழகத்தின் அபினவ் முகுந்த் விளையாடுகிறார். ”மிடில் ஓர்டரில்” வழக்கம் போல டிராவிட், லட்சுமண் அசத்த வேண்டும்.
சாதனை வீரர் சச்சின் இன்றைய போட்டியில், சர்வதேச அளவில் 100 வது சதத்தை எட்டுவார் என்று நம்பப்படுகிறது. இதுவரை ஒருநாள் (48 சதம்), டெஸ்ட் போட்டிகளில் (51 சதம்) சேர்த்து 99 சதம் அடித்துள்ள இவருக்கு, கிரிக்கட்டின் ”மெக்கா” என்றழைக்கப்படும், லார்ட்ஸ் மைதானம் கைகொடுக்க வேண்டும். இதற்கு முன் சச்சின் இங்கு, ஒரு அரைசதம் (10, 27, 31, 16, 12, 37 மற்றும் 16 ரன்கள்) கூட அடித்ததில்லை.
பின்வரிசையில் சோமர்செட் அணிக்கு எதிராக சதம் அடித்த ரெய்னா, யுவராஜ் சிங், கப்டன் டோனி கைகொடுக்க வேண்டும்.
பந்துவீச்சை பொறுத்தவரையில் ஜாகீர்கான் காயத்தில் இருந்து மீண்டுள்ளது பலம் தான் என்றாலும், பயிற்சி போட்டியில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாது வருத்தமே. வெஸ்ட் இண்டீசில் அசத்திய இஷாந்த் சர்மா, பிரவீண் குமார் கூட்டணி மீண்டும் நம்பிக்கை தரலாம். ஸ்ரீசாந்த்துக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே. சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஹர்பஜன் திறமை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இவருடன் அமித் மிஸ்ரா களமிறங்குவது சந்தேகமே.
சமீப காலமாக டெஸ்ட் தொடர்களில், இங்கிலாந்து அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. அணியின் துடுப்பாட்டம் வலிமையாக இருப்பது தான் இதற்கு முக்கிய காரணம். இந்த அணியின் அலெஸ்டர் குக் கடைசியாக பங்கேற்ற 6 இன்னிங்சில் 82, 189, 133, 96, 106 மற்றும் 55 என ரன்களை எடுத்துள்ளார். இவருடன் பயிற்சியில் அசத்திய கப்டன் ஸ்டிராஸ், இயான் பெல், டிராட், பீட்டர்சன் என வலுவான துடுப்பாட்ட படை, இந்திய அணிக்கு தொல்லை தர காத்திருக்கிறது.
வேகப்பந்து வீச்சில் டிரம்லெட் (6 அடி, 7 அங்குலம்) இந்திய அணியை மிரட்டுவார் என்று தெரிகிறது. சுவிங் செய்வதில் வல்லவரான ஆண்டர்சன் (உயரம் 6.2 அடி), ஆஷஸ் தொடரில் அசத்திய பிரஸ்னன், ஸ்டூவர்ட் பிராட் (உயரம் 6.5 அடி) ஆகியோரும் சொந்த மண்ணில் மீண்டும் திறமை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர். ஏனெனில் இந்த ஜோடி கடைசியாக பங்கேற்ற 16 டெஸ்டில், 11 போட்டிகளை வென்று தந்துள்ளது. சமீபத்தில் சவால் விட்டுள்ள சுழற்பந்து வீச்சாளர் சுவான், வீரம் எடுபடுமா என்று இனிமேல் தான் பார்க்க வேண்டும்.
சமீபத்தில் சொந்த மண்ணில் நடந்த ஐந்து டெஸ்ட் தொடரையும் இங்கிலாந்து வென்றுள்ளது. அதேநேரம் முதல்தர அணியான இந்தியாவும் சளைத்தது அல்ல. கப்டன் டோனியின் தலைமையில் எட்டு டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியுள்ளது. இரு அணிகளும் வலுவாக காணப்படுவதால், லார்ட்ஸ் டெஸ்ட் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து மோதும் லார்ட்ஸ் டெஸ்ட், பெரும்பாலும் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இன்றும், நாளை மறுநாளும் பலத்த மழை வரும் என்று தெரிகிறது. மற்றபடி போட்டி நடக்கும் ஐந்து நாட்களும் மழை பெய்ய 30 சதவீத வாய்ப்புள்ளது.

0 comments:

IP
Blogger Widgets