கோமாவில் இருந்து மீண்டார் முபாரக்

Wednesday, July 20, 2011

எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பின்னர் நான்காவது முறையாக நேற்று அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது.

துணைப் பிரதமர் யேயா எல் காமலை தொடர்ந்து மூன்று அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
எகிப்து நாட்டை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்த அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு எழுந்த மக்கள் நெருக்கடியையடுத்து அவர் பதவியிலிருந்து விலகினார்.
தற்போது ஷரம் எல் ஷேக் ரெசார்ட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முபாரக் கோமா நிலைக்கு சென்று விட்டதாக செய்திகள் வெளியானது. தற்போது கோமாவில் இருந்து மீண்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ ஆட்சியை எதிர்த்தும், விரைவில் சீர்திருத்தம் கொண்டு வர வலியுறுத்தியும் முபாரக் ஆட்சியிலிருந்த அமைச்சர்களை வெளியேற்ற வேண்டும் என்றும், கடந்த 8ம் திகதியில் இருந்து புதிய கிளர்ச்சியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து துணைப் பிரதமர் காமல் மற்றும் இவரைத் தொடர்ந்து மூன்று அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். கிளர்ச்சியின் போது அப்பாவி பொது மக்களை கொன்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த வாரம் 700 பொலிஸ் அதிகாரிகளின் பதவியும் பறிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று முபாரக் வீழ்ச்சிக்குப் பின்னர் நான்காவது முறையாக எகிப்து அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. முபாரக் ஆதரவு அமைச்சர்கள் 15 பேர் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர்.
முக்கிய அமைச்சர்களான வெளியுறவுத்துறை, நிதித்துறை, ராணுவம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்கள் நீக்கப்பட்டனர். புதிய துணைப் பிரதமர்களாக பழம்பெரும் பொருளாதார வல்லுனர் ஹசெம் பெப்லாவி மற்றும் வக்பு கட்சி தலைவர் அலி அல் சில்மி ஆகிய இருவரையும் பிரதமர் எசாம் ஷரப் நியமித்துள்ளார்.

0 comments:

IP
Blogger Widgets