பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு அமெரிக்கா, ஜப்பான் அணிகள் முன்னேறியுள்ளன.
ஜேர்மனியில் பெண்களுக்கான 6 வது ”பிபா” உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த அரையிறுதியில் அமெரிக்கா, பிரான்ஸ் அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்தே அமெரிக்க வீராங்கனைகளின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது.
ஆட்டத்தின் 9 வது நிமிடத்தில் அமெரிக்காவின் லாரன் செனி, ஒரு கோல் அடித்தார். இதற்கு பிரான்ஸ் வீராங்கனைகளால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் அமெரிக்கா 1-0 என முன்னிலை வகித்திருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட பிரான்ஸ் அணிக்கு, 55 வது நிமிடத்தில் சோனியா பாம்பஸ்டர், ஒரு கோல் அடித்து 1-1 என சமநிலை பெற்றுத் தந்தார்.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட அமெரிக்க அணிக்கு அபி வாம்பாச் (79 வது நிமிடம்), அலெக்ஸ் மார்கன் (82 வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்து வெற்றிக்கு வித்திட்டனர். தொடர்ந்து போராடிய பிரான்ஸ் வீராங்கனைகளால், கூடுதலாக கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.
ஆட்டநேர முடிவில் அமெரிக்க அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. முன்னதாக 1991, 99 ல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அமெரிக்க அணி, சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது. ஆட்ட நாயகி விருது அமெரிக்காவின் அபி வாம்பாச்சுக்கு வழங்கப்பட்டது.
மற்றொரு அரையிறுதியில் ஜப்பான் - சுவீடன் அணிகள் மோதின. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜப்பான் அணி, ஆட்டநேர முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறி, புதிய வரலாறு படைத்தது.
ஜப்பான் சார்பில் நஹோமி கவாசுமி (19, 64 வது நிமிடம்), ஹோமரே சவா (60 வது நிமிடம்) உள்ளிட்டோர் கோல் அடித்து கைகொடுத்தனர். சுவீடன் அணிக்கு ஜோஸ்பைன் (10 வது நிமிடம்) ஒரு கோல் அடித்து ஆறுதல் அளித்தார்.
இதன்மூலம் வரும் 18 ம் திகதி பிராங்பர்ட் நகரில் நடக்கவுள்ள முக்கியமான இறுதிப்போட்டியில் அமெரிக்கா, ஜப்பான் அணிகள் மோத உள்ளன. நாளை நடக்கவுள்ள மூன்றாவது இடத்துக்கான போட்டியில் பிரான்ஸ், சுவீடன் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.
பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி: இறுதிப்போட்டியில் அமெரிக்கா - ஜப்பான் மோதல்
Monday, July 18, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment