அவுஸ்திரேலியத் தொடரில் விளையாடும் இந்திய அணியில் இடம்பிடிப்பேன் என்று இந்திய கிரிக்கட் வீரர் சேதேஷ்வர் புஜாரா தெரிவித்தார்.
ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு ரோயல் சாலஞ்சர்ஸ் அணியில் விளையாடிய இளம் வீரரான புஜாராவுக்கு வலது கால் மூட்டில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஜூலை 1 ம் திகதி லண்டனில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இப்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கட் அகாடமியில் காயத்திலிருந்து குணமாவதற்கு தேவையான சிகிச்சைகளை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, அவுஸ்திரேலிய தொடருக்கு முன் அணிக்குத் திரும்பிவிடுவேன். காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்தால் மட்டுமே அவுஸ்திரேலிய தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு எனது பெயரை பரிசீலிப்பார்கள். டிசம்பரில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய தொடருக்கு முன்பாக காயத்திலிருந்து மீள முயற்சிப்பேன். அவுஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணிக்கு தெரிவு செய்யப்படுவேன் என்று நம்புகிறேன்.
ஐ.பி.எல். போட்டியில் விளையாடியபோது களத்தடுப்பின்போது காயம் ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்ட பிறகும் அது முழுமையாகக் குணமடைந்துவிட்டதா என்பது தெரியவில்லை. இதையடுத்து லண்டன் சென்று அங்குள்ள மூட்டு நிபுணரிடம் கலந்தாலோசித்தேன். அப்போது அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு தெரிவித்தார். இதையடுத்து அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். காயத்திலிருந்து முழுமையாகக் குணமடைய 4 மாதங்கள் ஆகும் என்றார்.
காயம் காரணமாக நல்ல வாய்ப்புகளை இழந்துவிட்டதாகக் கூறிய அவர், நம் கையில் எதுவும் இல்லை. காயம் ஏற்பட்டால் எதுவும் செய்ய முடியாது. நாட்டுக்காக விளையாட வேண்டும் என்று நினைக்கும் போது விளையாட முடியாமல் போனது ஏமாற்றம் அளித்தது. இருப்பினும் எல்லாவற்றையும் நேர்மறையானதாகவே எடுத்துக் கொள்கிறேன். அதைத் தவிர வேறுவழியில்லை.
காயத்திலிருந்து குணமடைந்த பிறகு மீண்டும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது இலக்கு. என்ன நடக்குமோ, அதுதான் நடக்கும். அதனால் கவலைப்பட வேண்டாம். காயத்திலிருந்து விரைவாக மீள வேண்டும் என்ற எண்ணத்தோடு இருங்கள் என்று சேவாக் என்னிடம் தெரிவித்தார். டிராவிட் எனக்கு அனுப்பிய செய்தியில், காயத்தில் இருந்து நீங்கள் குணமடைவீர்கள், அதற்காக கவலை கொள்ள வேண்டாம் என்று தெரிவித்திருந்தார். அது தனக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது என்றார் புஜாரா.
கடந்த ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 72 ரன்கள் குவித்தார் புஜாரா. இதுகுறித்து அவர் கூறியது, என்னுடைய ஆட்டத்தை பயிற்சியாளர் கேறி கிறிஸ்டன், மூத்த வீரர்கள் என எல்லோரும் வெகுவாகப் பாராட்டினார்கள். இதேபோல் தென் ஆப்பிரிக்க தொடரில் இக்கட்டான சூழலில் துடுப்பாட்டத்தின் செய்து சிறப்பாக விளையாடியதால் அனைவரையும் கவர்ந்தேன்.
இந்திய அணியில் மிடில் ஓர்டர் துடுப்பாட்ட வீரராக இடத்தைப் பிடிக்க பெரிய அளவில் போட்டி இருப்பதாக நினைக்கவில்லை. நிச்சயம் அணியில் இடம் பிடிப்பேன் என்றார். டெஸ்ட் மட்டுமின்றி இருபது ஓவர், ஒருநாள் அணியிலும் இடம் பெறுவதற்கு தேவையான தகுதிகளை மேம்படுத்த முயற்சித்து வருவதாக கூறிய புஜாரா, 3 வது ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக விளையாடினேன். 4 வது ஐ.பி.எல். போட்டியிலும் பெங்களூரு அணிக்காக சில ஆட்டங்களில் சிறப்பாக ஆடினேன். இந்த முறை பின்வரிசையில் களமிறங்கியதால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியவில்லை. இனி வரும் காலங்களில் இருபது ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக ஆடி திறமையை நிரூபிப்பேன்.
கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்று விளையாடிய இந்திய ”ஏ” அணியில் நான் தான் அதிக ரன்கள் குவித்தேன். இங்கிலாந்து லயன்ஸ் உள்ளிட்ட அணிகளுக்கு எதிராகவும் விளையாடியுள்ளேன். இங்கிலாந்து லயன்ஸ் அணியில் ஜொனாதன் டிராட், இயன் பெல், குக் உள்ளிட்ட சர்வதேச வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். எனவே இங்கிலாந்துக்கு எதிராக என்னால் சிறப்பாக ஆட முடியும் என்றார்.
அவுஸ்திரேலிய தொடரில் விளையாடும் அணியில் இடம் பிடிப்பேன்: புஜாரா நம்பிக்கை
Monday, July 18, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment