கிழக்கு மாகாண முதலமைச்சர் அறிவிப்பு
தற்போது தனித்தனியாக பிரிந்து செயற்படுகின்ற வடக்கு- கிழக்கு மாகாணத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் மட்டுமல்ல- இந்தியா- அமெரிக்கா-போன்ற மேற்கத்திய நாடுகளினாலும் ஒரு போதும் மீண்டும் இணைக்க முடியாது.இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சரும்- ரி.எம்.வி.பி கட்சியின் தலைவருமான எஸ். சந்திரகாந்தன் தெரிவித்தார்.
பெரிய நீலாவணை கடற்கரை வீதி அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்துவைக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு முதல் அமைச்சர் மேலும் கூறியதாவது:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தமிழ் மக்களுக்குமட்டுமல்ல எமது நாட்டிற்கும் எந்தப் பிரயோசனமும் இல்லை. தமிழ் மக்களை ஏமாற்றி அவர்கள் அரசியல் செய்கின்றார்கள்
நாம் கடந்த காலங்களில் அழிந்தது- இழந்தது போதும். பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை ஒற்றுமையோடும்- சமாதானத்தோடும் மீளக்கட்டியெழுப்ப மக்கள் முன்வரவேண்டும்.
கல்லோயா அபிவிருத்தி வேலைத் திட்டத்தின்போது சிங்கள குடியேற்றம் இடம்பெற்றதற்கான எந்தவித ஆதாரபூர்வமான சான்றிதழ்களும்- அறிக்கைகளும் கிடையாது.
இது இவ்வாறு இருக்க கிழக்கில் சிங்களக் குடியேற்றம் நடைபெறுவதாக ஊடகங்கள் வாயிலாக மக்களுக்குத் தெரிவித்து தமிழ் மக்களை உணர்ச்சிவசப்படுத்தி கிழக்கின் ஒற்றுமையைச் சீர்குலைத்து இனமுறுகலை ஏற்படுத்த ஒருசில தொழிற்சங்கங்களும்- அரசியல் வங்குரோத்துடைய அரசியல்வாதிகளும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் பொய்ப்பிரசாரம் உண்மைக்குப் புறம்பானது. இவை கண்டிக்கத்தக்க விடயமாகும்.
கிழக்கு மாகாணம் வடக்கை விட வித்தியாசமானது. கிழக்கில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். கிழக்கை ஆள்வதற்கு வட மாகாணத்தவர்கள் தேவையில்லை. கிழக்கில் அதிகமான அரசியல் தலைவர்கள் உள்ளனர். கிழக்கில் இன்று ஏற்பட்டுள்ள ஒற்றுமையையும்- சமாதானத்தையும் சீர்குலைக்க யாருக்கும் இடமளிக்க முடியாது என்றும் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment