புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் கோரிக்கை
இனியும் தவறான வழியில் செல்லாது நாட்டுக்கும் உங்கள் சமூகத்திற்கும் ஆற்ற வேண்டிய பணிகளை மேற்கொள்ளுங்களென சமூகத்துடன் நேற்று இணைக்கப்பட்ட 552 முன்னாள் புலி உறுப்பினர்களிடம் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் சுதந்த ரணசிங்க கோரிக்கை விடுத்தார். வவுனியா புனர்வாழ்வு நிலையங்களில் கடந்த இரண்டு வருட காலம் தொழில் பயிற்சிகளை பெற்ற 8 பெண்கள் உட்பட முன்னாள்புலி உறுப்பினர்கள் 552 பேர் நேற்று திங்கட்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தில் இது தொடர்பான வைபவம் நடைபெற்றது. புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர- அமைச்சின் செயலாளர் எஸ். திசாநாயக்கா- -மாவட்ட அரச அதிபர் திருமதி பி. எம். எஸ். சாள்ஸ் உள்ளிட்ட பலர் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.
முதல் முறையாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வவுனியா நகர சபைத் தலைவர் ஐ. கனகையாவும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டார். புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் இங்கு மேலும் கூறியதாவது:
மொத்தம் 24 புனர்வாழ்வு நிலையங்கள் இயங்கின. தற்போது எட்டு நிலையங்களில் 2864 பேர் மட்டுமே உள்ளனர். நெலுக்குளம் தொழில் நுட்ப கல்லூரி புனர்வாழ்வு நிலையம் இந்த மாதத்துடன் மூடப்பட்டு கல்லூரி நிர்வாகத்திடம் கட்டிடத்தை கையளிக்க வுள்ளோம்.
கடந்த முறை க. பொ. த. உயர்தரப் பரீட்சைக்கு 326 பேர் தோற்றினார்கள். இவர்களில் 266 பேர் சித்தியடைந்துள்ளனர். இம்முறை 186 பேர் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். திறமையான பெறுபேறுகளை அவர்கள் பெறுவார்கள் என்றார்.
நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்ட 552 பேருக்கும் சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு வசதியாக புனர்வாழ்வு அதிகார சபையினூடாக கடன் பெற்றுக் கொடுப்பதற்கான விண்ணப்பப் படிவங்களும் கையளிக்கப்பட்டன. அத்துடன் விடுதலையான படித்த இளை ஞர் யுவதிகளுக்கு ஏற்ற வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதற்கு ஏற்ற வகையில் “ஜொப் நெட்” ஊடாக பதிவுகளை செய்வதற்கான விண்ணப்பப் படிவங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment