இங்கிலாந்தில் போன் ஒட்டு கேட்பு விவகாரத்தில் சிக்கிய 168 ஆண்டு கால பாரம்பரிய பத்திரிகை நியூஸ் ஆப் தி வேர்ல்டு சமீபத்தில் மூடப்பட்டது.
இதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. பத்திரிகை அதிபர் ரூபர்ட் முர்டோக் நாடாளுமன்ற குழு விசாரணையை சந்திக்கவுள்ளார்.
இவரது நியூஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரெபேகா ப்ரூக்ஸ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
போன் ஒட்டு கேட்பு விவகாரத்தில் பொலிசார் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டதால் லண்டன் பொலிஸ் கொமிஷனர் பால் ஸ்டீபன்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தற்போது உதவி பொலிஸ் கொமிஷனர் ஜான் ஏட்ஸும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தீவிரவாத தடுப்பு பிரிவில் இவர் முக்கிய அதிகாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகையின் போன் ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கடந்த 2009ம் ஆண்டு கோரிக்கை எழுந்த போது இது குறித்து விசாரணை நடத்த வேண்டாம் என ஜான் ஏட்ஸ் முடிவெடுத்தார்.
அது தவறான முடிவு என ஒப்புக்கொண்ட ஜான் ஏட்ஸ் தனது பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த சிறப்பு பாராளுமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதனால் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டேவிட் கமரூன் தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு அவசரமாக நாடு திரும்புகிறார்.
இந்நிலையில் நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகையில் பணியாற்றிய நிருபர் சியன் ஹோரே தனது வீட்டில் நேற்று இறந்து கிடந்தார். போன் ஒட்டு கேட்பு மூலம் செய்திகளை வெளியிட்டதில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.
இவரது மரணத்தில் மர்மம் இருப்பது போல் தெரியவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் ஹோரே மரணம் குறித்து தீவிர விசாரணை நடக்கிறது. நியூஸ் ஆப் தி வேர்ல்டு விவகாரத்தில் தொடர்ந்து பல திருப்பங்கள் ஏற்படுவது இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிக்கையின் நிருபர் திடீர் மரணம்: இங்கிலாந்தில் பெரும் சர்ச்சை
Wednesday, July 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment