கடாபி அரசு நிர்வாகத்துடன் அமெரிக்க தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை

Wednesday, July 20, 2011

லிபியாவில் அதிபர் கடாபி ஆட்சியாளர்களை அமெரிக்க தூதர்கள் சந்தித்தனர். கடந்த நான்கு மாதமாக லிபியாவில் தாக்குதல் நடத்தி வரும் நேட்டோ படையினர் தாக்குதலை நிறுத்தும் விதமாக இந்த சந்திப்பு நடந்துள்ளது.

லிபியா அரசு அதிகாரிகளை சந்தித்தது உண்மை தான் என ஒரு அமெரிக்க அதிகாரியும் ஒப்புக் கொண்டார்.
இந்த சந்திப்பு சமாதான நடவடிக்கை அல்ல. கடாபி விரைவில் பதவி இறங்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தவே சந்தித்தோம். இனிமேல் லிபிய அரசு நிர்வாகத்தை சந்திக்க மாட்டோம் என்றும் அவர்கள் கூறினர்.
மத்திய கிழக்கு கொள்கையில் வெளியுறவுத் துறையின் முதன்மை அதிகாரியான ஜெப்ரி டி பெல்ட்மான் உள்பட மூன்று அமெரிக்க ராஜிய பிரதிநிதிகள் லிபிய அரசின் நான்கு உறுப்பினர்களை சந்தித்தனர்.
அமெரிக்க அதிகாரிகள் சனிக்கிழமை துனிஷியாவில் சந்தித்ததாக லிபிய தரப்பு தகவல்கள் கூறுகின்றன. கடாபி பதவி விலக தயாராகி விட்டார் என லிபிய தூதர்களை குறிப்பிட்டு பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் அலய்ன் ஜுபே தெரிவித்து இருந்தார்.
லிபியா தரப்பில் இருந்து துருக்கி, நியூயோர்க், பாரிஸ் என அனைத்து இடத்திற்கும் தூதர்கள் வருகிறார்கள் என அலய்ன் ஜுபே குறிப்பிட்டு இருந்தார். லிபியாவில் பிரகா நகரை கைப்பற்றி விட்டதாக போராட்டக்காரர்கள் கூறினர்.
ஆனால் அந்த கடலோர நகரம் தங்கள் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என லிபிய அரசு கூறுகிறது. திரிபோலியில் விமான நிலையம் அருகே நேட்டோ நடத்திய வான்வழித் தாக்குதலில் சிவிலியன் ரேடார் மையம் தகர்க்கப்பட்டது.

0 comments:

IP
Blogger Widgets