நாட்டைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கும் போது சில சக்திகள் தாம் செய்த தவறுகளை மறைப்பதற்காக எம் மீது குற்றஞ் சுமத்துகின்றனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ தெரிவித்தார்.
நாடு முகங்கொடுக்கும் நெருக்கடிகளை வெற்றிகொள்வதற்கு உலக நடப்பு சம்பந்தமான தெளிவினைப் பெற்றிருப்பது மிகவும் முக்கியமாகும் எனவூம் ஜனாதிபதி தெரிவித்தார்.
முழு உலகமும் பொருளாதார வீழ்ச்சிக்கு உட்பட்ட போதும் திட்டமிட்ட செயற்பாடுகளால் இலங்கைக்கு அந்நிலை எழவில்லை என தெரிவித்த ஜனாதிபதி- நாடு முகங்கொடுக்கும் சகல சவால்களையும் எதிர்கொள்வதற்கு உலகளாவிய தெளிவு மிக அவசியமெனவும் கூறினார்.
முகாமைத்துவப் பயிற்சிக்குத் தகைமைபெற்ற பட்டதாரிகளுக்கு மக்கள் வங்கியில் தொழில் வாய்ப்பு வழங்கி அவர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கும் வைபவம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.
பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்தன- மக்கள் வங்கியின் தலைவர் டபிள்யூ. கருணாஜீவ- பொது முகாமையாளர் வசந்தகுமார்- ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில் :-
2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச வங்கிகளில் 1500 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்குவதாக நாம் உறுதியளித்தோம். அதனை தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறோம். நாம் 2005 ஆம் ஆண்டு பதவியேற்ற பின்னர் 40000 மேற்பட்ட பட்டதாரிகளுக்குத் தொழில் வாய்ப்புகளை வழங்கியுள்ளோம். அரச துறையில் மேலும் 15000 பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மக்கள் வங்கி மட்டுமன்றி எந்த நிறுவனத்திற்கும் நியமனங்களை வழங்கும் போது அவர்களுக்குப் பயிற்சிகளை வழங்குவது சிறந்ததாகும். அந்த வகையில் பல்வேறு துறைகளிலும் பட்டம் பெற்ற பட்டதாரிகள் 237 பேருக்கு முகாமைத்துவ பயிற்சிகளை வழங்கி மக்கள் வங்கியில் இணைக்கத் தீர்மானித்தோம்.
எமது திட்டமிட்ட செயற்பாடுகளே நாம் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைய கரணமாகியது. 30 வருட யுத்தத்தின் போதும் நாம் எமது பொருளாதாரத்தைத் திட்டமிட்டே முன்னெடுத்தோம். அதனால் தான் அனைத்து நெருக்கடி நிலையிலும் முழு உலகமுமே பொருளாதார நெருக்கடியை சந்தித்த போதும் நாம் அதிலிருந்து மீள முடிந்தது.
நம் நாட்டை மீட்டெடுத்து அபிவிருத்தி யில் கட்டியெழுப்பிய போது அதைப் பொறுக்கமாட்டாதவர்கள் விஷமப் பிரசாரங்களில் ஈடுபட்டனர். உலக வங்கிஇ சர்வதேச நாணய நிதியம் என்பவற்றிற்குச் சென்று இலங்கை அரசாங்கத்துக்குக் கடன் வழங்க வேண்டாம் என கூறினர். இலங்கையில் கருத்துச் சுதந்திரமில்லையென பிரசாரம் செய்து அமெரிக்காவுக்கு சென்று அரசாங்கத்துக்கு உதவக்கூடாதென வலியுறுத்தி வந்தனர். இத்தகைய சவால்களுக்குள்ளேயே நாம் எமது பொருளாதாரத்தை நிலையானதாக வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது.
யுத்தம் இடம்பெற்ற நாடுகளில் இலங்கையைப் போன்று விரைவான மீள் குடியேற்றம் வேறு எங்கும் இடம்பெற்றதில்லை. இடம்பெயர்ந்த மூன்று இலட்சம் பேரில் தற்போது பத்தாயிரம் பேரே மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர். எம்மை நெருக்கடிக்கு உள்ளாக்குவோர் இது பற்றி சிந்திப்பதில்லை. அவர்கள் வேறு ஒரு கோணத்திலேயே பிரசாரங்களை மேற்கொள்கின்றனர்.
அரச துறையில் நியமனம் பெறுவோர் உள்நாட்டில் என்ன நடக்கிறது உலகில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்வது அவசியம். சர்வதேசம் சம்பந்தமாகவும் அதன் உண்மைத் தன்மை சம்பந்தமாகவும் தெரிந்திருப்பது அவசியம். அரசாங்கம் சொல்வதோ எதிர்க்கட்சி சொல்வதோ அல்ல சுயமாக அறிவது மிக முக்கியமாகும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
முகாமைத்துவப் பயிற்சியாளர்களாக மக்கள் வங்கியில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களில் பெருமளவிலான தமிழ்இ முஸ்லிம் இளைஞர்இ யுவதிகளும் உள்ளடங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment