நல்லொழுக்கமுள்ள இளைய சந்ததியை உருவாக்குவது ஆசிரியர்களின் பொறுப்பாகும்!

Monday, July 18, 2011

கண்டியில் ஜனாதிபதி
தாய் நாட்டை நேசித்து அதன் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்யும் உணர்வினை பாடசாலை மட்டத்திலிருந்தே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கண்டி தர்மராஜ கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்;
திறமையுள்ள மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கான வளர்ச்சிக்கு அரசாங்கம் உரிய வழிவகைகளை மேற்கொள்ளும். விளையாட்டுத்துறையில் திறமை படைத்தவர்களை பல்கலைக்கழகத்துக்கு அனுமதிப்பதிலும் விசேட கவனம் செலுத்தப்படும்;
நான் பதவியேற்றதும் மாணவர்களுக்கு வாக்குறுதியொன்றை வழங்கினேன். அறிவிலும் நல்லொழுக்கத்திலும் சிறந்த எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதே அந்த வாக்குறுதியாகும். அத்துடன் சிறந்த ஆரோக்கியமான எதிர்கால பரம்பரையை உருவாக்குவது அவசியம் எனவும் வலியுறுத்தினேன். அதற்கான செயற்திட்டங்களையே அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
சுதந்திரமாக மாணவர்கள் பாடசாலைக்குச் செல்ல முடியாத யுகம் ஒன்று இருந்தது. நாம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தோம். சந்தேகம் பயமின்றி மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லக்கூடிய சூழலை ஏற்படுத்தியுள்ளோம்.
அதேவேளை- நாட்டையும்- பெரியோரையும் மதித்து நல்லொழுக்கத்துடன் முன்னேறக்கூடிய இளைய சந்ததியை உருவாக்குவதும் எமது பொறுப்பாகும். இதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பு அவசியமாகும். பிள்ளைகள் பெற்றவர்களிடம் இருப்பதைவிட அதிக நேரத்தை பாடசாலையில் ஆசிரியர்களுடனேயே கழிக்கின்றனர். அவர்கள் பெற்றோர்கள் சொல்வதை விட ஆசிரியர்கள் சொல்வதையே ஏற்றுக்கொள்கின்றனர். அதனால் மாணவர்களை சரியான வழியில் உருவாக்கும் பாரிய பொறுப்பு ஆசிரியர்களுக்கே உள்ளது.
காலத்திற்குப் பொருத்தமான மாணவர்களை உருவாக்குவதில் சிறந்த செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். நாட்டை நேசிக்கும் உணர்வினை பாடசாலை மட்டத்திலேயே ஏற்படுத்த வேண்டியது அவசியம். அதற்கான சூழலை உருவாக்குவதும் ஆசிரியர்களுடைய பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்

0 comments:

IP
Blogger Widgets