வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்கு இலங்கையின் உண்மை நிலை தெளிவுபடுத்தப்படுகின்றனது!

Monday, July 18, 2011

பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தகவல்
சனல் 4 உட்பட அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் விஷமப் பிரசாரங்கள் நாட்டின் சுற்றுலாத்துறை முன்னேற்றத்தைப் பாதிக்காது என பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
சுற்றுலாத் துறை மேம்பாடு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கும் செய்தியாளர் மாநாடொன்று நேற்று தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இது தொடர்பில் மேலும் தெரிவித்த பிரதியமைச்சர்:

உல்லாசப் பிரயாணிகள் சர்வதேச ரீதியில் இலங்கையைப் பற்றி கேள்விப்படும் விடயங்களை நிவர்த்திக்கும் வகையில் இங்குள்ள உண்மையான நிலவரங்கள் அவர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த வருடத்தில் மாத்திரம் சுற்றுலாத் துறை வருமானமாக 50 கோடி ரூபாவை ஈட்ட முடிந்துள்ளது. பெருமளவு பணத்தை செலவு செய்யும் உல்லாசப் பிரயாணிகளை இலங்கைக்கு அழைக்கவும் அவர்களுக்கான மேலதிக வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
2016 ஆம் ஆண்டிற்குள் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்துவரும் இலக்கில் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு இலங்கைக்கு வருபவர்களுக்கென 45000 ஹோட்டல் அறைகள் தேவைப்படுகின்றன. அதனை நிவர்த்திக்கும் வகையில் பல 5 நட்சத்திர ஹோட்டல்கள் நாடளாவிய ரீதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் கிழக்கின் பாசிக்குடாவில் 1000 அறைகளைக் கொண்ட பத்து ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்படுவதுடன் குச்சவெளி மற்றும் தெற்கின் பல பிரதேசங்களிலும் பாரிய ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. தற்போது நாட்டிலுள்ள ஹோட்டல்களில் 22735 அறைகளே உள்ளன. மேலும் 22500 அறைகளை வழங்கும் வகையில் ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன எனவும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்

0 comments:

IP
Blogger Widgets