இங்கிலாந்து கப்டன் ஸ்டிராஸ் சோமர்செட் அணியில் விளையாடியது குறித்து ஜாகீர் கான் கருத்து

Monday, July 18, 2011

தனது துடுப்பாட்ட திறன் குறித்து ஸ்டிராசிற்கு சந்தேகம் வந்துவிட்டது.

இதனால் ஏற்பட்ட நெருக்கடியில் தான், இந்தியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளார் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் முடிந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணி கப்டன் ஸ்டிராஸ், 3 போட்டியில் பங்கேற்று நான்கு இன்னிங்சில் மொத்தம் 27 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதில் மூன்று முறை வெலகேதிரா பந்தில் வீழ்ந்துள்ளார். இதனால் இந்தியாவின் ஜாகீர் கான் பந்து வீச்சில், தனது துடுப்பாட்ட திறனை சோதிக்க பயிற்சி போட்டியில் களமிறங்கியுள்ளார் ஸ்டிராஸ்.
இதுகுறித்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் கூறியது, இங்கிலாந்து அணியின் கப்டன் ஸ்டிராஸ், இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களிடம் விரைவில் அவுட்டாகி விடுகிறார். இதனால் தனது திறமை மீது அவருக்கே சந்தேகம் வந்துவிட்டது. இதை பயிற்சி போட்டியின் மூலம், சரி செய்து கொள்வதற்காக, சோமர்செட் அணிக்காக களமிறங்கி உள்ளார். இது போன்ற எதிர்மறை எண்ணத்துடன் ஒரு கப்டன் செயல்படுவது அணியின் வளர்ச்சிக்கு உதவாது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சிறப்பானதாக கருதுகிறேன். சிறிய இடைவெளிக்கு பிறகு அணியில் இடம் பிடித்துள்ள நான், இதில் சாதித்து வெற்றிக்கு உதவ வேண்டும். முதல்தர அணியாக இருப்பதால் எங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. சிறப்பான கிரிக்கட்டை கொடுத்து வரும் நாங்கள், தொடர்ந்து வெற்றி பெற முயற்சிப்போம்.
சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வெற்றி பெற்றதும், அதிக தன்னம்பிக்கையை தந்துள்ளது. இங்கிலாந்தின் சூழ்நிலைக்கு ஏற்ப, விரைவில் மாறிவிடுவோம் என்பதால் வானிலை, எங்களை பாதிக்காது. போட்டிகளில் எப்போதும் மகிழ்ச்சியோடு பந்து வீசி வருகிறேன். இதனால் தான் சாதிக்க முடிகிறது.
இந்த தொடரை, 2007 ல் நடந்த டெஸ்ட் தொடரைப் போலத்தான் பார்க்கிறேன். அப்போது போல, இம்முறையும் வெற்றி பெற்று, கோப்பையுடன் தான் நாடு திரும்புவோம். தற்போது நடக்கும் பயிற்சி போட்டியை பயன்படுத்தி கொண்டு இன்னும் வலிமை அடைவேன்.
போட்டிகளில் அவ்வப்போது மழை குறுக்கீடு இருந்தாலும், சோர்வடையாமல் உற்சாகத்துடன் செயல்பட வேண்டும். மேலும் களத்தில் கடின போராட்டத்தை வெளிப்படுத்தவும் தயாராக உள்ளேன். என்று ஜாகீர் கான் தெரிவித்தார்.

0 comments:

IP
Blogger Widgets