இந்தியாவின் சுரேஷ் ரெய்னா, சோமர்செட் அணியின் ஸ்டிராஸ் உள்ளிட்டோர் அதிரடியாக சதம் அடிக்க மூன்று நாள் பயிற்சி போட்டி ”டிரா” ஆனது.
டோனி தலைமையிலான இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ளது. டெஸ்ட் தொடருக்கு முன், இந்திய அணி, இங்கிலாந்தின் உள்ளூர் அணியான சோமர்செட் அணிக்கு எதிராக மூன்று நாள் பயிற்சி போட்டியில் விளையாடியது.
முதலில் துடுப்பாட்டம் செய்த சோமர்செட் அணிக்கு சுப்பையா (156), காம்ப்டன் (88), ஸ்டிராஸ் (78), ஜோன்ஸ் (51*) உள்ளிட்டோர் கைகொடுத்தனர். முதல் இன்னிங்சில் சோமர்செட் அணி 3 விக்கெட்டுக்கு 425 ரன்கள் எடுத்து ”டிக்ளேர்” செய்தது. பின், முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் எட்டு விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்திருந்தது. ரெய்னா (30) அவுட்டாகாமல் இருந்தார்.
நேற்றைய மூன்றாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் மழை காரணமாக சற்று தாமதமாக துவங்கியது. முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு, ஸ்ரீசாந்த் (1) ஏமாற்றம் அளித்தார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரெய்னா, சதம் அடித்து அசத்தினார். அடுத்து வந்த முனாப் படேல் (6) சோபிக்கவில்லை. முதல் இன்னிங்சில் இந்திய அணி 224 ரன்களுக்கு சுருண்டது. அபாரமாக ஆடிய ரெய்னா 112 பந்தில் 5 சிக்சர், 14 பவுண்டரி உட்பட 103 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். சோமர்செட் அணி சார்பில் சார்ல் வில்லோபி 6 விக்கெட் வீழ்த்தினார்.
பின், இரண்டாவது இன்னிங்சை துவக்கிய சோமர்செட் அணி, ஸ்டிராஸ், சுப்பையா ஜோடி சூப்பர் துவக்கம் அளித்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 131 ரன்கள் சேர்த்த போது, அமித் மிஸ்ரா சுழலில் சிக்கிய சுப்பையா (45) அரைசத வாய்ப்பை இழந்தார். அடுத்து வந்த ஜேம்ஸ் ஹில்டிரத் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.
பின் இணைந்த ஸ்டிராஸ், பீட்டர் டிரிகோ ஜோடி அதிரடியாக ரன் சேர்த்தது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டிராஸ் சதம் அடித்தார். மறுமுனையில் இவருக்கு ஒத்துழைப்பு தந்த டிரிகோ, சிக்சர் மழை பொழிந்தார். சோமர்செட் அணி, தேநீர் இடைவேளை வரை இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்து, ”டிக்ளேர்” செய்தது. ஸ்டிராஸ் (109 ), பீட்டர் டிரிகோ (85, 57 பந்து, 7 சிக்சர், 7 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அமித் மிஸ்ரா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.
பின், 462 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற வலுவான இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. இந்திய அணி 6.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின் மீண்டும் ஆட்டம் துவங்கியது. இந்திய அணி 16.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்திருந்த போது, மீண்டும் மழை குறுக்கிட மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதன்மூலம் இப்போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி, தோல்வியின்றி ”டிரா” என அறிவிக்கப்பட்டது. காம்பிர் (36), அபினவ் முகுந்த் (33) அவுட்டாகாமல் இருந்தனர்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடும் லெவன் அணியில் இடம் பிடிக்க யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் சோமர்செட் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் யுவராஜ் சிங் ரன் எடுக்காமல் அவுட்டாகி ஏமாற்றினார். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட சுரேஷ் ரெய்னா, சதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் இவருக்கு முதல் டெஸ்டில் விளையாடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
கோப்பா அமெரிக்கா கால்பந்து: காலிறுதியில் கொலம்பியாவை பெரு வீழ்த்தியது
Wednesday, July 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment