பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: சுவீடனுக்கு மூன்றாவது இடம்

Wednesday, July 20, 2011

பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரில், சுவீடன் அணி மூன்றாவது இடம் பிடித்தது.

ஜேர்மனியில் பெண்களுக்கான 6 வது ”பிபா” உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. இதில் நேற்று முன்தினம் நடந்த மூன்றாவது இடத்துக்கான போட்டியில் சுவீடன், பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் துவக்கத்தில் இருந்தே சுவீடன் வீராங்கனைகள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஆட்டத்தின் 29 வது நிமிடத்தில் சுவீடனின் லோட்டா செக்லின் முதல் கோல் அடித்து நம்பிக்கை அளித்தார். இதற்கு பிரான்ஸ் வீராங்கனைகளால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் சுவீடன் அணி 1-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட பிரான்ஸ் அணிக்கு, 56 வது நிமிடத்தில் எலோடி தாமிஸ் ஒரு கோல் அடித்து ஆறுதல் அளித்தார். இதற்கு ஆட்டத்தின் 82 வது நிமிடத்தில் சுவீடனின் மரி ஹாமர்ஸ்டிரோம் பதிலடி கொடுத்தார். ஆட்டநேர முடிவில் சுவீடன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக மூன்றாவது இடம் பிடித்தது.
முன்னதாக கடந்த 1991 ல் நடந்த முதலாவது உலகக் கோப்பை தொடரில் சுவீடன் அணி, மூன்றாவது இடம் பிடித்தது. கடந்த 2003 ல் இறுதி வரை முன்னேறிய சுவீடன் அணி, ஜேர்மனியிடம் தோல்வி அடைந்து இரண்டாவது இடம் பிடித்தது.

0 comments:

IP
Blogger Widgets