லிபிய அதிபர் கடாபி நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை கடுமையாக வலுத்த போதிலும் அவர் அங்கிருந்து வெளியேற மறுத்து வருகிறார்.
தனது ஆதரவாளர்களிடையே பேசிய கடாபி ஒருபோதும் நாட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருவதோடு ஏராளமான உயிர்ச் சேதமும் ஏற்பட்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை மட்டும் அங்கு 13 முறை குண்டுச் சத்தம் கேட்டது. எய்ன்ஜரா மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களையும், தஜுரா என்ற பகுதியில் உள்ள ராணுவப் படைகளின் முகாம்களையும் புரட்சியாளர்கள் சூறையாடியதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
தலைநகரின் மேற்குப் பகுதியில் உள்ள ஜவியா பகுதியில் தனது ஆதரவாளர்களிடையே கடாபி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: நான் இங்கிருந்து வெளியேற வேண்டும் என்று கூறுகிறார்கள்.
நான் ஒருபோதும் இங்கிருந்து வெளியேற மாட்டேன். எனக்காக நிறைய தியாகங்களை செய்துள்ள என் மூதாதையர்கள் மற்றும் மக்கள் வாழும் இந்த மண்ணைவிட்டு ஒருபோதும் வெளியேற மாட்டேன்.
என்னுடைய மக்களுக்காக என்னையே தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன். இத்தாலி மற்றும் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து லிபியாவை மீட்க என்னுடைய மூதாதையர்கள் ரத்தம் சிந்திய இந்த மண்ணில் இருந்து வெளியேற மாட்டேன் என்றார்.
முன்னதாக சனிக்கிழமை அரசுப் படையினர் வீசிய குண்டு மற்றும் கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். 70 பேர் காயமடைந்தனர். அவர்களில் மேலும் இருவர் ஞாயிற்றுக்கிழமை இறந்ததால் பலியானோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.
அரசுப் படையினர் லிபியாவின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியிலிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளதாக அங்குள்ள புரட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் அஜ்தபியா மருத்துவமனை மருத்துவர் அகமது தினாரி கூறுகையில்,"காயமடைந்தவர்கள் அனைவரும் கண்ணிவெடி தாக்குதலில் தான் சிக்கியுள்ளனர்" என்றார்.
இதுவரை 250 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. பன்னாட்டு படைகளும், போராட்டக்காரர்களும் சேர்ந்து சனிக்கிழமை பிரேகாவில் இருந்த அரசுப் படைக்கு சொந்தமான ஒரு ராணுவ டாங்கி, ஆயுதம் நிரப்பிய 5 வாகனங்கள், ராக்கெட் லாஞ்சர் ஆகியவற்றை தாக்கி அழித்துள்ளனர்.
திரிபோலியின் கிழக்குப் பகுதியில் பன்னாட்டு படைகள் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 ரேடார்கள், ஏவுகணை, ஆயுதங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றின.
பன்னாட்டு படைகளும் புரட்சியாளர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி போராடி வருகிறது. லிபியாவில் உள்ள கடாபி எதிர்ப்பாளர்களை அமெரிக்கா அங்கீகரித்துள்ளது. இது அதிபர் கடாபிக்கு மிகப் பெரிய பின்னடைவாகும்.
எனது சொந்த மண்ணை விட்டு ஒருபோதும் வெளியேற மாட்டேன்: கடாபி
Monday, July 18, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment