பிரபல பத்திரிகை அதிபர் முர்டோக்கின் நியூஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியான ரெபக்கா ப்ரூக்ஸ் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டார்.
பிரிட்டனில் இருந்து வெளிவந்த 168 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகை கடந்த சில மாதங்களில் தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிக்கியது.
இதையடுத்து பத்திரிகையை நிறுத்தி விடுவதாக அதன் அதிபர் ரூபர்ட் முர்டோக் அறிவித்தார். அதன்படி சமீபத்தில் பத்திரிகை நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் பிரிட்டன் பாராளுமன்றத்தில் சூடுபிடித்தது. எதிர்க்கட்சித் தலைவர் மிலிபேண்ட் இவ்விவகாரத்தில் தீவிர விசாரணை கோரினார்.
"பிரிட்டிஷ் ஸ்கை ப்ராட்காஸ்ட்டிங்" என்ற அரசு செய்தி நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் ஏலத்தில் ரூபர்ட் முர்டோக் பங்கேற்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார். இதனால் முர்டோக் ஏலத்தில் பங்கேற்பதில் இருந்து பின்வாங்கினார்.
இந்நிலையில் நியூஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ரெபக்கா ப்ரூக்சைக் காப்பாற்றவே நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகை இழுத்து மூடப்பட்டதாக செய்திகள் வெளியாயின. ரூபர்ட் முர்டோக் அதை மறுத்தார்.
தொடர்ந்து நியூஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் தலைமை நிர்வாகி பொறுப்பில் இருந்து ப்ரூக்ஸ் சமீபத்தில் கழட்டி விடப்பட்டார். தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் பிரிட்டன் பொலிசார் ஏற்கனவே ஒன்பது பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ப்ரூக்சையும் லண்டன் போலீசார் கைது செய்தனர். பொலிசாருக்குப் பணம் கொடுத்து முக்கிய பிரபலங்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ப்ரூக்ஸ் கைது செய்யப்பட்டது குறித்து லண்டன் பொலிசாரோ, நியூஸ் இன்டர்நேஷனல் நிறுவனமோ உறுதி செய்யவில்லை. ப்ரூக்சின் கைதால் ரூபர்ட் முர்டோக்கிற்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.
நியூஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி கைது
Monday, July 18, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment