வன்னி மக்களுடன் பாடி ஆடி ஓட்டு கேட்க அரசிற்கு ஆதரவாக மனோ குழு களமிறங்குகிறது! கோடிக்கணக்கான ரூபா பேரம் பேசப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Wednesday, July 20, 2011

வடக்கில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் அரசாங்கம் விடுத்த அழைப்பினை ஏற்று தென்னிந்திய திரை இசைப் பாடகர்கள் மூவர் இலங்கை வந்திருக்கின்றமை வன்னி மக்கள் மத்தியில் மிகுந்த வேதனையினைத் தோற்றுவித்திருக்கின்றது. உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடக்கில் குறிப்பாக யாழ்.தேர்தல் மாவட்டத்தில் வெற்றி பெற்று அதனை சர்வதேசத்திற்குக் காட்டவேண்டும் என்ற முனைப்பில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவும், 24 அமைச்சர்களும் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மாவட்டங்களில் தீவிர பரப்புரை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக கிளிநொச்சியில் நடைபெறவுள்ள தேர்தல் பரப்புரை நிகழ்விற்கு தென்னிந்திய திரையிசைப் பாடகர்கள் மனோ, சுசித்திரா, கிரிஷ் ஆகியோர் அழைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கின்றது. 20-07-2011 நாளை கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் இந்த நிகழ்வு நடைபெறவிருப்பதாக இராணுவம் யாழ்ப்பாணத்திலும்,கிளிநொச்சியிலும் ஒலிபெருக்கிகளில் அறிவித்து வருகின்றது.

மஹிந்தராஜபக்சவின் கிளிநொச்சி பயணத்தினை முன்னிட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஒலிபெருக்கிகளில் அறிவிப்புக்கள் விடுக்கப்பட்டு வருகின்றன என்று செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மனோ, சுசித்திரா, கிரிஷ் ஆகியோர் இசை நிகழ்ச்சி நடைபெறும் வேளை அரசாங்கத்திற்கு வாக்களிக்குமாறு மக்களைக் கோருவர் என்று ஏற்பாட்டாளர்கள் தமக்கு நெருக்கமான வட்டாரங்களுக்குத் தெரிவித்திருக்கின்றனர்.

வன்னியில் மக்கள் கொத்துக் கொத்தாக செத்துவீழ்ந்த போது தமிழ்நாட்டில் தமிழ் உணர்வாளர்கள் தம்மைத் தாமே எரித்துக்கொண்டு உயிர்துறந்திருந்தனர். இந்நிலையில் இன அழிப்பினை மேற்கொண்ட அரசாங்கத்திற்குச் சார்பாக தென்னிந்தியத் திரையிசைப் பாடகர்கள் வன்னி செல்வது வன்னி மக்கள் மத்தியில் மிகுந்த வேதனையினைத் தோற்றுவித்திருக்கின்றது. இவர்களது வன்னி பயணத்திற்காக கோடிக்கணக்கான ரூபா பேரம் பேசப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

IP
Blogger Widgets