இலங்கைக்கு விழுந்த பேரிடி: ஹிலரி ஈழத் தமிழர் குறித்து நிச்சயம் பேசுவார் !

Monday, July 18, 2011

அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஒருவர் சென்னை சென்று தங்கி அம்மாநில முதல்வரைச் சந்திக்கவிருப்பது வரலாற்றில் இதுவே முதல்தடவை எனக் கூறப்படுகிறது. அமெரிக்க ராஜாங்கச் செயலாளரும் உலகில் பலம்மிக்க பதவியொன்றில் உள்ளவருமான திருமதி கிளிங்கடன் அவர்கள் சென்னை செல்லவுள்ளார். அவர் சென்னையில் தங்கியிருக்கும் நாட்களில், அம்மாநில முதல்வர் செல்வி ஜெயலலிதாவை சந்தித்து உரையாடவுள்ளார். இருப்பினும் இவரது விஜயம் ஒரு அரசியல் அல்லது உத்தியோகபூர்வ விஜயம் அல்ல எனவும், அவர் பெண்கள் மேம்பாடு மற்றும், வணிகம் சம்பந்தமாகவே சென்னை செல்வதாகவும் அமெரிக்கா கண்டிப்பாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


சென்னை செல்லும் திருமதி கிளிங்கடன் அவர்கள் இலங்கைத் தமிழர் விடையம் தொடர்பாக செல்வி ஜெயலலிதாவோடு பேசவேண்டும் என பல தரப்பாலும் அழுத்தங்கள் பிரியோகிக்கப்பட்டு வந்ததோடு, பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது. இன்று(18.07.2011) அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள உயரதிகாரி ஒருவர் இந்திய செய்திச்சேவைக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி ஒன்றில், ஹிலரி கிளிங்கடன் அவர்கள் நிச்சயமாக இலங்கைத் தமிழர் குறித்துப் பேசுவார் என உறுதிப்படுத்தியுள்ளார். ஹிலரி கிளிங்கடனின் சென்னை விஜயத்தில் அரசியல் எதுவும் இல்லை என்றாலும் நிச்சயம் இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி பேசப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளது இலங்கை அரசுக்கு விழுந்த பேரிடியாக உள்ளது !

சமீபத்தில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவரவேண்டும் எனக் குறிப்பிட்ட கருத்துகளை, இலங்கை வன்மையாகக் கண்டித்ததோடு, தாம் மாநில அரசுகளோடு பேசுவது இல்லை என்றும் தெரிவித்து, மாநில அரசை ஒரு செல்லாக்காசு என வர்ணித்திருந்தது. ஆனால் உலகின் பலம் மிக்க பதவியில் இருக்கும் திருமதி கிளிங்டன் அவர்கள், செல்வி ஜெயலலிதாவோடு பேசவிருப்பது தொடர்பாக இலங்கை அதிருப்தியடைந்துள்ளதாகவும், இருப்பினும் அதனைத் தடுக்கும் வல்லமை இல்லாது இருப்பதாவும் அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தமிழ் நாட்டில் வாழும் 6 கோடித் தமிழர்களும் ஈழத் தமிழர்கள் மீது அக்கறையும், கரிசனையும் கொண்டுள்ள நிலையில், ஈழத் தமிழர்கள் பற்றி பேசாமல் வருவது, ஒரு நியாயமான செயலாக அமையாது என அமெரிக்க உயரதிகாரி கருத்து தெரிவித்துள்ளார் என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

0 comments:

IP
Blogger Widgets