தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம்: மன்னிப்பு கோரிய பிரதமர்

Thursday, July 21, 2011

தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் தனது செய்தித் தொடர்பாளரை நியமித்தது தொடர்பாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை வருத்தம் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்று அவர் தொடர்ந்து கூறிவந்தார். ஆனால் தொலைபேசி ஒட்டுக்கேட்பு தொடர்பாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதைத் தொடர்ந்தே நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகையின் ஆசிரியராக இருந்த ஆன்டி கோல்சனை தமது செய்தித் தொடர்பாளராக நியமித்ததற்காக கமரூன் வருத்தம் தெரிவித்தார். இந்தப் பத்திரிகை ரூபர்ட் முர்டோக்குக்கு சொந்தமானது.
பரபரப்பான செய்திகளை வெளியிடுவதற்காக பிரபலமானவர்கள், உயர் பதவியில் இருப்பவர்கள் உள்ளிட்டோரின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டதாக இந்தப் பத்திரிகை மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்தப் பத்திரிகைக்காக தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல்துறையினர், அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என பலருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் ஆன்டி கோல்சனை தமது செய்தித் தொடர்பாளராக நியமித்த பிரதமர் டேவிட் கமரூன் மீதும் புகார் கூறப்பட்டு வருகிறது.
இதையடுத்து நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டம் புதன்கிழமை நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக ஆப்பிரிக்கப் பயணத்தைப் பாதியில் ரத்து செய்துவிட்டு கமரூன் நாடு திரும்பினார்.
தனது விளக்க அறிக்கையை நாடாளுமன்றத்தின் மக்களவையில் அவர் வாசித்தார். அப்போது அவர் கூறுகையில்,"கோல்சனை பணியில் அமர்த்தியது நான்தான். அதற்காக நான் வருத்தப்படுகிறேன். அந்தத் தவறால் ஏற்பட்ட மோசமான விளைவுகளுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் அவருக்கு பணி வழங்கியிருக்கக்கூடாது" என்று அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து எம்.பி.க்கள் அவரிடம் சரமாரியாகக் கேள்விகளைக் கேட்டனர். "இப்போது குற்றம்சாட்டப்பட்டிருக்கும் கோல்சனை தெருவுக்கே கொண்டு வந்தவர் பிரதமர். அதற்காக பாதி வருத்தத்தை மட்டும் தெரிவித்துவிட்டு முழுமையான மன்னிப்புக் கோராமல் இருப்பது ஏன்? என்று லேபர் கட்சியைச் சேர்ந்த எட் மிலிபாண்ட் கேள்வி எழுப்பினார்.
"மனிதர்களை கணிப்பதில் ஏற்பட்ட மாபெரும் தவறு இது" என்றும் அவர் கூறினார்.

0 comments:

IP
Blogger Widgets