ஆப்கன் பொலிசாருக்கு சிறப்பு சண்டை பயிற்சி: ஜப்பான் குழுவினர் விரைவு

Friday, July 22, 2011

ஆப்கானிஸ்தான் பொலிசாருக்கு ஜூடோ பயிற்சி வழங்குவதற்காக ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆறு பொலிஸ் அதிகாரிகள் துருக்கியில் முகாமிட்டுள்ளனர்.

கடந்த 2001ம் ஆண்டில் தலிபான் ஆட்சி அகற்றப்பட்டது முதல் ஆப்கனில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டுள்ளது.
சட்டம், ஒழுங்கை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை ஆப்கன் அரசு மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஆப்கன் பொலிசாருக்கு ஜூடோ தற்காப்புக் கலை பற்றிய பயிற்சி வழங்க முடிவு செய்து ஜப்பான் சர்வதேச கூட்டுறவு ஏஜன்சியிடம் உதவி கேட்கப்பட்டது.
ஆப்கனில் இல்லாமல் வேறு ஒரு நாட்டில் பயிற்சி முகாம் நடத்தலாம் என ஜப்பான் தரப்பில் கூறப்பட்டது. அதன்படி துருக்கியில் பயிற்சி முகாம் நடத்த அந்நாட்டு அரசிடம் உதவி கேட்கப்பட்டது. துருக்கி அரசு சம்மதம் வழங்கியதை தொடர்ந்து அந்நாட்டின் மத்தியப் பகுதியில் உள்ள சிவாஸ் நகரில் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
இதற்காக ஜப்பான் பொலிஸ் ஏஜன்சியை சேர்ந்த ஆறு அதிகாரிகள் துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் எய்ஜி எய்புகு என்பவர் ஜூடோ கலையின் நுணுக்கங்கள் பற்றி விரிவான விளக்கவுரை வழங்குவார்.
துருக்கிப் பொலிசாருக்கு சொந்தமான இடத்தில் வரும் 25ம் திகதியில் துவங்கி அக்டோபர் 7 வரையிலும் நடக்கும் இந்த பயிற்சி முகாமில் ஆப்கன் பொலிசார் 500 பேர் கலந்து கொள்கின்றனர்.
இதுகுறித்து டோக்கியோ நகர பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜூடோவின் ஒழுக்கம், கட்டுப்பாட்டில் துவங்கி ஜூடோ பயிற்சி சீருடை அணிவது உட்பட பல்வேறு செய்முறைப் பயிற்சிகள் ஆப்கன் பொலிசாருக்கு வழங்கப்படும்.
தற்காப்புக் கலை பற்றி தெரிந்துகொள்வது ஆப்கன் பொலிசாருக்கு புதிய அனுபவமாக இருக்கும். பொலிஸ் பணிக்குரிய ஒழுக்கம் மற்றும் தொழில் முறைகளை உணர தற்காப்புக் கலையின் ஆற்றல் அவர்களுக்கு உதவும்.

0 comments:

IP
Blogger Widgets