சிறிலங்கா விவகாரம் குறித்து ஹிலாரி பேசுவதைத் தடுக்க இந்தியா முயற்சி? � இந்திய ஊடகம் குற்றச்சாட்டு

Tuesday, July 19, 2011

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் தொடர்பாக பேசுவதை தடுக்க இந்தியா முயற்சிப்பதாக இந்தியாவின் ஆங்கில இணைய ஊடகம் ஒன்று குற்றம்சாட்டியுள்ளது.

இரண்டுநாள் பயணமாக நேற்றிரவு புதுடெல்லியை சென்றடைந்துள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் இன்று இந்தியப் பிரதமருடன் முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளார்.


நேற்றிரவு 8.40 மணியளவில் சிறப்பு விமானம் ஒன்றில் புதுடெல்லியை அடைந்த ஹிலாரியுடன் 25 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவொன்றும் வந்துள்ளது.

இவர்களில் ஒபாமா நிர்வாகத்தின் உயர்நிலைப் பாதுகாப்பு அதிகாரிகளும் அடங்குவர்.

இன்று காலை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்எம்.கிருஸ்ணாவுடன் பேச்சு நடத்தும் ஹிலாரி அதையடுத்து இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கையும் சந்தித்துப் பேசவுள்ளார்.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் விவகாரங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது பேசப்படும் என்று புதுடெல்லி தகவல்கள் கூறுகின்றன.

ஹிலாரி கிளின்ரன் இன்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியையும், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் உள்ளிட்ட அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.

நாளை சென்னைக்குச் செல்லும் ஹிலாரி அங்கு தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது சிறிலங்கா விவகாரம் முக்கிய இடத்தை பெறும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர் றொபேட் ஓ பிளேக் கூறியிருந்தார்.

ஆனால், ஹிலாரி கிளின்ரன் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் தொடர்பாக பேசுவதைத் தடுக்கவே இந்தியா முனைவதாக இந்திய ஆங்கில இணைய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இருதரப்பு பேச்சுக்களின் போது இந்த விவகாரத்தை உள்ளடக்காமல் விடுவதற்கு இந்தியதரப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அத்துடன் சென்னையிலும் சிறிலங்கா விவகாரம் குறித்து தமிழ்நாடு முதல்வருடன் ஹிலாரி கிளின்ரன் பேசுவதை தடுக்கவும் இந்தியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த ஊடகம் குற்றம்சாட்டியுள்ளது.

அதற்காகவே, அரசசார்பற்ற பயணமாகவே சென்னை செல்வதால் வெளிவிவகாரம் சார்ந்த விடயங்கள் குறித்து ஹிலாரி பேசமாட்டார் என்று முன்கூட்டியே இந்திய இராஜதந்திரிகள் அவருக்கு தடைபோட முயன்றதாகவும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, தமிழ்நாடு முதல்வருடனான நாளைய சந்திப்பின் போது சிறிலங்கா விவகாரம் குறித்த ஹிலாரி கலந்துரையாடாமல் போனால்- அது இருவரது நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தி விடும் என்றும் இந்திய ஊடகம் கருத்து வெளியிட்டுள்ளது.

0 comments:

IP
Blogger Widgets